Last Updated : 18 Dec, 2019 05:33 PM

 

Published : 18 Dec 2019 05:33 PM
Last Updated : 18 Dec 2019 05:33 PM

அலிகர் பல்கலை மூடலால் மசூதிகளில் அடைக்கலமான வெளிநாட்டு மாணவர்கள்

புதுடெல்லி

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை தடுக்க உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஜனவரி 5 வரை மூடப்பட்டு விட்டது. விடுதிகளும் காலிசெய்யப்பட்டதால் அதில் பயிலும் வெளிநாட்டு மணவர்கள் வளாகத்தின் மசூதிகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் அமலாக்கப்பட்டது முதல் அலிகரின் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இதேவகை போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் அம்மாநில போலீஸார் புகுந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினர்.

இந்த அத்துமீறலை கண்டித்து நாடு முழுவதிலும் டெல்லி போலீஸ் மற்றும் மத்திய அரசிற்கு கண்டனங்கள் எழுந்தன. இதை கண்டித்து அதே தினம் இரவு அலிகர் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதை தடுக்கவேண்டி அப்பல்கலைக்கழகம் உ.பி. போலீஸாருக்கும், மத்திய பாதுகாப்பு படைகளுக்கு தன் வளாகத்தில் நுழைய அனுமதித்தது. இதையடுத்து ஜாமியாவில் நடந்தது போன்ற வன்முறையை உபி போலீஸார் அலிகரில் நடத்தி இருந்தனர்.

இதை தொடர்ந்து அதன் நிர்வாகம் சார்பில் ஜனவரி 5 ஆம் தேதி வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் தம் விடுதிகளையும் காலிசெய்யும்படி உத்தரவிடப்பட்டது.

இதற்காக அதன் விடுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்படும் என மாணவர்கள் மிரட்டப்பட்டனர். இதனால், வேறு வழியின்றி மாணவர்கள் அனைவரும் தங்கள் விடுதியை காலிசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு பல்வேறு நாடுகளில் இருந்து வந்து தங்கி பயிலும் 715 மாணவர்களும் விடுதிகளை காலி செய்தனர். இவர்களால உடனடியாக தம் நாடு திரும்ப முடியாது என்பதால் அவர்கள் வளாகத்திலேயே உள்ள பல்வேறு மசூதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சுமார் 37,000 மாணவர்கள் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 1700 பேராசிரியர்கள் மற்றும் 3,600 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு வெளிநாட்டவர்களில் இளங்கலை 431, முதுநிலை 125 மற்றும் 129 மாணவர்கள் உயர்நிலை ஆய்வுக்கல்வியும் பயின்று வருகின்றனர்.

ஏமன் நாட்டினர் மிக அதிகமாக 151, தாய்லாந்து 117 இந்தோனேசியா 66 உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவரும் பயில்கின்றனர். வெளிநாட்டவர்களில் மாணவிகள் எண்ணிக்கை 258 ஆகும்.

பாகிஸ்தான் மாணவர்

ஆப்கானிஸ்தான் 60, ஜோர்டான் 49, துர்க்மேனிஸ்தான் 21, நேபால் 20, இரான் 15 மற்றும் பாலஸ்தீன் 13 பேரும் அலிகரின் மாணவர்களாக உள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இங்கு ஒரே ஒரு மாணவர்கள் கல்வி பயில்கிறார்.

சுமார் 150 வருடங்களுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் துவக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளின் மாணவர்கள் வந்து தங்கி கல்வி பயில்வது வழக்கமாக உள்ளது. இதனால், உலகின் முஸ்லிம் நாடுகள் உள்ளிட்டவைகளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கல்விக்கு தனிமதிப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x