

பாகிஸ்தானில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமையை எதிர்க்கட்சிகள் அளிப்பார்களா என்று பிரதமர் மோடி விடுத்த சவாலின் அர்த்தம் என்ன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி போக்நாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அவர் பேசுகையில், ‘‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அதனை ஜனநாயக ரீதியாக தான் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். நகர்புற நக்சல்கள் இந்த பிரச்சினையில் மாணவர்களை அரசுக்கு எதிராக தூண்டி விட முயலுகின்றனர்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை அச்சப்படுத்தி அரசியல் லாபம் பெற காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிடுகின்றன. பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவோம், காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் எனக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா" எனக் சவால் விடுத்திருந்தார்
பிரதமர் மோடியின் சவால் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ப.சிதம்பரம் பதில் அளிக்கையில், " பிரதமர் மோடியின் சவால் எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் எதற்குப் பாகிஸ்தான் மக்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும். அவர்கள்தான் ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டின் குடியுரிமை வைத்திருக்கிறார்களே. எதிர்க்கட்சிகளுக்கு இதுபோன்று பிரதமர் மோடி விடும் சவாலுக்கு அர்த்தம் என்ன?
இன்றுள்ள மாணவர்கள், இளைஞர்கள் சுதந்திரமான சிந்தனையுடையவர்களாக, மதச்சார்பின்மை உடையவர்களாக, சகிப்புத்தன்மை நிரம்பியவர்களாக, மனிதநேயம் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்காமல் அந்த மதிப்பீடுகளுக்கு மத்திய அரசு சவால் விடுக்கிறதா? " எனத் தெரிவித்தார்