

ஆந்திரா மாநிலம் முழுவதும் ஒரே சீராக வளர்ச்சி பெறும் வகையிலும், அனைத்து பிராந்தியங்களும், மக்களும் பயன் பெறும் வகையிலும் 3 தலைநகரங்கள் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதலே தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் செயல்படுவார்கள் என்றும், இவர்களது பதவிக்காலம் 30 மாதங்களாக இருக்கும் என அறிவித்தார். அதன்படி பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். இதுபோலவே அவ்வப்போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ஆந்திராவில் 3 தலைநகரங்கள் செயல்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
முந்தைய தெலுங்கு தேசம் அரசால் குண்டூர்-கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களுக்கு இடையே 33 ஆயிரம் ஏக்கரில் அமராவதி நகரம் உருவாக்கப்பட்டு தலைநகராக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமராவதி அல்லாமல் வேறு பகுதியை ஆந்திராவின் தலைநகராக மாற்ற தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்தார்.
இந்தநிலையில் மாநில தலைநகர் தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் ஒரே சீராக வளர்ச்சி பெறும் வகையிலும், அனைத்து பிராந்தியங்களும், மக்களும் பயன் பெறும் வகையிலும் 3 தலைநகரங்கள் செயல்படும் என அவர் அறிவித்தார்.
அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், ராயலசீமா பகுதியில் உள்ள பாரம்பரியமான நகரான கர்னூலில் உயர் நீதிமன்றத்தை அமைத்து அதனை சட்டத் தலைநகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அதுபோலவே கடற்கரை பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராக செயல்படும அனவும் அவர் கூறினார்.
இதனால் 3 பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், சமநிலையிலான வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.