கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்கு: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேசியதாக போலீஸ் புகார்

கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் மீது வழக்கு: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேசியதாக போலீஸ் புகார்
Updated on
1 min read

2017-ல் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்த துயரச் சம்பவத்தின் போது தலைப்புச் செய்தியாகத் திகழ்ந்த கோரக்பூர் மருத்துவர் கபீல் கான் அலிகார் முஸ்லிம் பல்கலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விமர்சன ரீதியாக எதிர்ப்பு தெரிவித்து பேசியதையடுத்து மீண்டும் வழக்கில் சிக்கியுள்ளார்.

மதத்துவேஷத்தை தூண்டி விடுவதான சட்டப்பிரிவின் கீழ் டாக்டர் கஃபீல் கான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாக அலிகார் போலீஸ் உயரதிகாரி அபிஷேக் தெரிவித்தார். டிசம்பர் 13ம் தேதி அவர் இவ்வாறு பேசியதாகவும் இந்த விவகாரம் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதல் தகவலறிக்கையின் படி கபீல் கான் பேசியதாக பதிவு செய்யப்பட்டதில், “மோட்டா பாய் அனைவரையும் ஒன்று இந்துவாக இரு அல்லது முஸ்லிமாக இரு என்பதாக பாடம் நடத்துகிறார் ஆனால் மனிதனாக இருக்க அல்ல. ஆர்.எஸ்.எஸ் தொடங்கியது முதலே அவருக்கு அரசியல் சட்டம் மீதான நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. குடியுரிமைத் திருத்த சட்டம் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவது, இதனையடுத்து தேசியக் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு அவர்கள் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் தன் பேச்சில் கூறியதாக எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்னவெனில், “இது நம் இருப்புக்கான போராட்டம், நாம் போராட வேண்டும்” என்று கூறியுள்ளார் டாக்டர் கபீல் கான். ஆர்.எஸ்.எஸ் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் தாடி வைத்தவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது., இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியா நம் நாடல்ல என்பதை அரசு நம்மிடம் கூறுகிறது என்றும் கபீல் கான் பேசியுள்ளதாக எஃப்.ஐ.ஆர்-இல் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சின் மூலம் மத நல்லிணக்கத்துக்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவித்திருப்பதாக எப்.ஐ.ஆர். தெரிவித்துள்ளது.

இதே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தின் போது இந்துத்துவாவை எதிர்த்து கோஷம் போட்டதாக இன்னொரு அடையாளம் தெரியாத நபரும் புகார் வலையில் சிக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in