

பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம், காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.
இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி போக்நாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அதனை ஜனநாயக ரீதியாக தான் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். நகர்புற நக்சல்கள் இந்த பிரச்சினையில் மாணவர்களை அரசுக்கு எதிராக தூண்டி விட முயலுகின்றனர்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை அச்சப்படுத்தி அரசியல் லாபம் பெற காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிடுகின்றன. ஆனால் குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம்கள் உட்பட இந்திய குடிமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நான் உறுதியளிக்கிறேன்.
பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம், காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா.
இந்திய மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ள ஆதரவால் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றன.’’ எனக் கூறினார்.