Last Updated : 17 Dec, 2019 12:59 PM

 

Published : 17 Dec 2019 12:59 PM
Last Updated : 17 Dec 2019 12:59 PM

முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உள்பட 5 பிரிவினருக்கு சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் ஆகியோருக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்தது.

நம் தேசத்தில் மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் வழங்கி இருக்கிறது. இதை எதிர்த்து பாஜக மூத்த நிர்வாகியும் , வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், " ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த சமூகத்தினர் சேர்ந்தவர்கள் இருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்கிட வேண்டும். அதற்கான விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும். 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்கிட வேண்டும்.

தேசிய மக்கள் தொகை அடிப்படையில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் இந்துக்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்கிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நீதிபதிகள் பிஆர் காவே, சூர்யகாந்த் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.கே.போப்டே கூறுகையில், " மதங்களை நாடுமுழுவதுக்கும் பொதுவாகத்தான் கண்டிப்பாக கருத வேண்டும். காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்து, மற்ற மாநிலங்களில் சிறுபான்மையாக இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சினை. மொழிகள் மாநிலங்கள் அளவோடு முடிந்து விடுகின்றன.

மதங்கள் அப்படியல்ல, மாநில எல்லை கடந்தும் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியா அடிப்படையில்தான் அணுக முடியுமே தவிர மாநிலம் வாரியாக அணுக முடியாது. லட்சத்தீவுகளில் முஸ்லிம்கள் இந்துக்கள் பின்பற்றும் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

இந்த மனுவில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் இருந்தார். மேலும், மனுதாரர் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரனும் இருந்தார்.

அப்போது அவர்கள் இருவரிடமும் தலைமை நீதிபதி போப்டே, " மாநில வாரியாக மக்கள் தொகை அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் எப்போதாவது தீர்ப்பு அளித்துள்ளதா. அவ்வாறு இருந்தால் தீர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டலாம். எவ்வாறு இந்த மனுவுக்கு நெறிமுறைகள் வகுத்து உத்தரவிட முடியும்.

மொழிகளை வைத்துத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன, மதங்களை அடிப்படையாக வைத்து அல்ல. மாநில வாரிய மதத்தைச் சேர்ந்த மக்கள் அடர்த்தி அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்கிட முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, இதைத் தள்ளுபடி செய்கிறோம் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x