‘‘அயோத்தியில் ராமர் கோயில்: ஒரு கட்சி மட்டும் உரிமை கொண்டாட முடியாது’’ - அமித் ஷாவுக்கு சிவசேனா பதிலடி

‘‘அயோத்தியில் ராமர் கோயில்: ஒரு கட்சி மட்டும் உரிமை கொண்டாட முடியாது’’ - அமித் ஷாவுக்கு சிவசேனா பதிலடி
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு கட்சி மட்டுமே உரிமை கொண்டாட முடியாது, அதற்கு பலரும் உழைத்துள்ளனர் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கான தடை நீங்கியதாக கருதப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அயோத்தி விவகாரம் தொடர்பாக பேசுகையில் ‘‘அயோத்தி பிரச்சினை நூற்றாண்டு காலம் தீர்க்கப்படாமல் இருந்தநிலையில் அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீர்வு கண்டுள்ளது. கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 4 மாதங்களில் அங்கு ராமர் கோயில் கட்டப்படும்.’’ எனக் கூறினார்.

இந்தநிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமித் ஷாவின் கருத்து மூலம் ராமர்கோயில் பாஜகவின் சாதனை என கருத முடியுமா என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு ஒரு கட்சி மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. அதற்கு பலரும் உழைத்துள்ளனர். சாதாரண பொதுமக்கள் தொடங்கி சாதுக்கள், சன்யாசிகள் என பலரும் பணியாற்றியுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத், பாஜக தொண்டர்கள், லட்சக்கணக்கான கரசேவகர்கள் என பலருக்கும் இதில் பங்களிப்பு உள்ளது. இதற்கு ஒரு கட்சி மட்டுமே உரிமை கொண்டாட முடியாது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in