

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த நடந்த போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தது பற்றி சிபிஐ அல்லது நீதிமன்ற வழிகாட்டுதலுடன் விசாரணை நடத்த உத்தவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது. இதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் எனத் தெரிவித்தது.
இதனிடையே குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த நடந்த போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தது பற்றி சிபிஐ அல்லது நீதிமன்ற வழிகாட்டுதலுடன் விசாரணை நடத்த உத்தவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.
ஆனால் நாடுமுழுவதும் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை தனித்தனியாக விசாரிப்பதில் சிரமம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் நிலையங்களை தீ வைத்து கொளுத்துதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதால் இதனை முக்கியத்துவம் கருதி விசாரிக்க வேண்டும் என உபாத்யாய் வலியுறுத்தினார்.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதிகள் மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறினர்.