

ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட மாணவர்கள் இல்லை. கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடைபெற்றது. இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழக போராட்டம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் கூட மாணவர் இல்லை. கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தும் காட்சிகள் வைரலான நிலையில் நாடு முழுவதும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழும்பியுள்ளன. இந்நிலையில்தான் டெல்லி போலீஸார் கைதான 10 பேரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்ற தகவலைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று, மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் ஜிஹாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாவோயிஸ்ட்டுகளும், பிரிவினைவாதிகளும் ஊடுருவுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தார், டெல்லி போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்திய போலீஸில் புகார் அளிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.