சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுக்கிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

பிரதமர் மோடியின் அரசு சமூகத்தில் பிரிவினையையும், வன்முறையையும் உருவாக்குவதுடன் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒரு நல்ல அரசின் பணி என்பது நாட்டில் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்குவதும், சிறந்த நிர்வாகத்தை அளித்து, அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாப்பதுதான். ஆனால், பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது. வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்குவதாக அரசு இருக்கிறது. இளைஞர்களை நிலையற்ற தன்மைக்கும், வெறுப்பு நிறைந்த படுகுழிக்கும் நாட்டை இந்த அரசு தள்ளுகிறது

நாட்டில் நிலையற்ற தன்மையை பரப்புவதும், இளைஞர்களின் உரிமையைப் பறிப்பதும், தேசத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்துவதும், தனது சொந்த அரசியல் நலன்களுக்காக இருப்பதுதான் இந்த அரசின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. பிரிவினைவாதத்துக்கான கருத்துருவின் எழுத்தாளர்களாகப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும்தான் இருக்கிறார்கள்.

அசாம், மேகாலயா மாநிலங்கள் பற்றி எரிகின்றன, 4 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல அமித் ஷாவுக்கு துணிச்சல் இல்லை அதனால் பயணத்தை ரத்து செய்தார். அவர் மட்டுமல்ல வங்கதேச அமைச்சர், ஜப்பான் பிரதமரும் இந்தியா வருவதைத் தவிர்த்தனர்

தேசம் முழுவதும் கல்விக் கட்டண உயர்வு, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் போராடி வருகினறனர். ஆனால் மோடி அரசு, இளைஞர்களுக்குத் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் என்று வண்ணம் தீட்டுகிறது.

மோடி அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது, வேலையின்மை எப்போதும் இல்லாதவகையி் உயர்ந்துவிட்டது, பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது, கல்வி நிறுவனங்கள் குழப்பத்தில் இருக்கின்றன, ஆனால் இவற்றைக் கவனிக்காமல், மோடி அரசு, மதங்களுக்கு இடையே பதற்றத்தைப் பரப்பியும், குழப்பத்தை ஏற்படுத்தியும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறது.

மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பும் செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய குடியுரிமை பதிவோடு, குடியுரிமை திருத்தச்சட்டம்.

மோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் சக்தி திரளும்போது விழிக்கும்போது, புதிய வடிவில் அலைபோன்ற மாற்றம் உருவாகும். இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையின் கட்டவிழ்த்த அடக்குமுறை மோடி அரசின் முடிவுக்கான தொடக்கம்
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in