

காயமடைந்த ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவியுங்கள் என்று டெல்லி சிறுபான்மை ஆணையம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஏராளமானோர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பல்கலை. துணை வேந்தர் நஜ்மா அக்தர், ''எந்த வித அனுமதியும் இல்லாமல், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்திருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காவல்துறையின் கொடூர நடவடிக்கைகள் மூலம் எங்களின் மாணவர்களை பயமுறுத்தி உள்ளனர். பல்கலைக்கழக சொத்துகளையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்'' என்று தெரிவித்திருந்தார்.
பல்கலை. மாணவர் ஒருவர், டெல்லி காவல்துறையினர் நூலகத்துக்குள் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். இந்நிலையில், காயமடைந்த ஜாமியா மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சஃபார்ஃபுல்-இஸ்லாம் கான் கூறும்போது, ''டெல்லி கல்கஜி காவல் நிலைய அதிகாரி, காயமடைந்து காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதற்காக ஆணையம் உத்தரவிடுகிறது
காயத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்குக கல்கஜி காவல் நிலைய அதிகாரியே தனிப்பட்ட வகையில் பொறுப்பாவார். இதுதொடர்பாக அவர் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இதை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.