குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: கேரளாவில் ஒரே மேடையில் இடதுசாரி - காங்கிரஸ் தலைவர்கள்

முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா
முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முதன்முறையாக இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸும் இணைந்து போராட்டம் நடத்தின.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது.
இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்தநிலையில் கேரளாவில் அரசியல் ரீதியாக எதிரும், புதிருமாக இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன், ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்தபோராட்டத்தில் முஸ்லிம் லீக் உட்பட இரு அணியையும் சேர்ந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில் ‘‘வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் வன்முறைக்கு பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான் காரணம். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கேரள மாநிலம் ஒன்றுபட்டு நிற்கிறது. கேரள மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பார்கள்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in