Published : 16 Dec 2019 03:59 PM
Last Updated : 16 Dec 2019 03:59 PM

அயோத்தியில் 4 மாதங்களில் பிரமாண்ட ராமர் கோயில்: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி

ராஞ்சி

அயோத்தியில் 4 மாதங்களில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலானா மக்புசூர் ரஹ்மான், மிஷ்பாஹுத்தீன், முகமது உமர் மற்றும் ஹாஜி நஹூப் ஆகியோர் தனித்தனியாக 5 சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு அளித்துள்ளது. அடுத்தது 6-வது நபராக முகமது அயூப் என்பவரும் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். மூல மனுதாதரர் சித்திக் சார்பில் மவுலானா சயத் ஆசாத் ரஷித் என்பவரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதை எதிர்த்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக், சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், நந்தினி சுந்தர், ஜான் தயால் உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து தனியாக ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கான தடை நீங்கியதாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அயோத்தி விவகாரம் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது:

அயோத்தி பிரச்சினை நூற்றாண்டு காலம் தீர்க்கப்படாமல் இருந்தநிலையில் அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீர்வு கண்டுள்ளது. கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 4 மாதங்களில் அங்கு ராமர் கோயில் கட்டப்படும்.
ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் காஷ்மீர் பிரச்சினையை ஏன் பேசுகிறீர்கள் என ராகுல் காந்தியும், சிபு சோரானும் கேள்வி எழுப்புகின்றனர். காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதியாக அவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் தான் காஷ்மீரை பற்றி பேசினால் அவர்களுக்கு பிடிப்பதில்லை’’ என அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x