உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கு; பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி-கதறி அழுதார்: தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

எம்எல்ஏ குல்தீப் செங்கார் : கோப்புப்படம்
எம்எல்ஏ குல்தீப் செங்கார் : கோப்புப்படம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் நகரில் சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எம்ஏ குல்தீப் செங்காரை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி என்று இன்று அறிவித்தது. குற்றவாளி என்று நீதிபதி அறிவித்ததும் நீதிமன்றவளாகத்தில் குல்தீப் செங்கார் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

குல்தீப் செங்காருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை (செவ்வாய்கிழமை) அறிவிக்கப்படும் என்றும் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் அறிவித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக , குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.

உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால், எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது.

குல்தீப் சிங் செங்கார் மீது ஐபிசி 120 பி பிரிவு (குற்றச்சதி), 363 (ஆள் கடத்தல்), 366 (திருமணத்துக்குப் பெண்ணை கட்டாயப்படுத்துதல்), 376 (பலாத்காரம்), போக்ஸோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வழக்கறிஞர்கள், உறவினர்களுடன் காரில் சென்ற போது லாரி மோதியதில் உறவுக்கார பெண்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட சிறுமியைக் கொல்ல நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை, விபத்து, மற்றும் அதன் தொடர்புடைய வழக்கு என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும் வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனிடையே குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக டெல்லி திஸ் ஹசாரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இந்த வழக்கு விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அரசுத் தரப்பில் 13 சாட்சிகளும், பிரதிவாதியின் தரப்பில் 9 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். சிறுமியின் தாயாரும், அவரது மாமாவும் அரசின் முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.

சிறுமியிடம் நீதிபதி விசாரணை நடத்தியபோது கேமராக்கள் அணைக்கப்பட்டன. சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதி நேரடியாகப் பதிவு செய்துகொண்டார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிபதி தர்மேஷ் சர்மா இன்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில், "பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என அறிவிக்கப்படுகிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவருமான சசி சிங் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட செங்காருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும்" என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

நீதிபதி குற்றவாளி என்று குல்தீப் செங்காரை அறிவித்ததும் அவர் நீதிமன்ற வளாகத்தில் தனது சகோதரி முன்னிலையில் கண்ணீர்விட்டு கதறி அழுதார். போக்ஸோ சட்டம், பலாத்கார வழக்கு ஆகியவற்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in