Published : 16 Dec 2019 03:36 PM
Last Updated : 16 Dec 2019 03:36 PM

டெல்லி ஜாமியா போராட்டத்தில் வன்முறை: போலீஸார் விளக்கம்

புதுடெல்லி

டெல்லியில் நேற்று ஜாமியாவில் நடந்த போராட்டத்தில் 24 அரசு பேருந்துகள், 10 போலீஸ் வாகனங்கள், 100 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இதனால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் டெல்லியில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக அம்மாநில போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி காவல்துறை செய்தித்தொடர்பாளர் ரண்தாவா கூறியதாவது:

டெல்லியில் நேற்று ஜாமியாவில் நடந்த போராட்டத்தில் 24 அரசு பேருந்துகள், 10 போலீஸ் வாகனங்கள், 100 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸார் துப்பாக்கிச்சூடு ஏதும் நடத்தவில்லை.

ஜாமியா பல்கலை மாணவர்களிடம் திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. இதனை மாணவர்கள் நம்ப வேண்டாம். ஜாமியாவில் நடந்த கலவரம் குறித்து குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவர்.


இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமியா நகர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கலவரம் ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் கூடி வன்முறையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட புகாரின் பேரில் அடையாளர் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நியூ பிரன்ஸ் காலனி காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக கூடுதல், கலவரம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x