

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் வருத்தம் அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இது கலவரமாக மாறியது. மாணவர்கள் மீது போலீஸார் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியதாவது:
"தேசிய குடியுரிமைச் சட்டம் 2019 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இச்சட்டம் இந்தியா ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வரும் ஏற்றுக்கொள்ளுதல், ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை ஆகியவற்றைப் பறைசாற்றுகிறது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை. அவை மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. விவாதமும், ஆலோசனைகளும் எதிர்க் கருத்தும் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், அந்த ஜனநாயக மரபைக் கடைப்பிடிப்பதில் பொதுச் சொத்துகளுக்கு பங்கமோ இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கடியோ ஏற்படுத்துவது நெறியாகாது.
எனது சக இந்தியர்களுக்கு நான் இந்த வேளையில் ஒன்றை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். தேசிய குடியுரிமைச் சட்டம் எந்த ஒரு குடிமகனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவரையும் பாதிக்காது. அதனால் எந்த ஓர் இந்தியரும் இச்சட்டம் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.
இந்தச் சட்டம் ஆண்டாண்டு காலமாக வெளியில் ஒடுக்குமுறையைச் சந்தித்துவிட்டு இந்தியாவைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாமல் வந்தவர்களுக்கு ஆதரவானது.
இந்தத் தருணத்தின் தேவை அனைவரும் கைகோத்து இந்தியாவின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதே. ஒவ்வொரு இந்தியரின் கரமும் வலுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஏழை, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இது அமைதி காக்க வேண்டிய நேரம். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டிய தருணம். அதனால், வதந்திகளில் இருந்து உண்மைக்கு மாறாக பரப்பப்படும் தகவல்களில் இருந்து விலகி நிற்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.
சிலர் சுய லாபத்துக்காக ஊறு விளைவித்து நம்மைத் துண்டாட அனுமதிக்க முடியாது".
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.