Last Updated : 16 Dec, 2019 01:24 PM

 

Published : 16 Dec 2019 01:24 PM
Last Updated : 16 Dec 2019 01:24 PM

சர்ச்சைப் பேச்சு: ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரியுள்ளது தேர்தல் ஆணையம்

ரேப் இன் இந்தியா சர்ச்சைப் பேச்சு தொடர்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் ஜார்கண்ட் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று (டிச.12) ஜார்கண்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பலாத்காரங்கள்) நடைபெற்று வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அப்பெண் மோசமான விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி நரேந்திர் மோடி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

பெண்களைப் படிக்கவைப்போம்; பாதுகாப்போம் என்று மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. பாஜகவினரிடமிருந்து தான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை" என்று பேசியிருந்தார்.

ராகுலின் பேச்சைக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜக பெண் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், எந்த நிலையிலும் மன்னிப்பு கோர இயலாது என ராகுல் காந்தி கூறிவிட்டார். இந்நிலையில், ஸ்மிருதி இரானி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தியிடம் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. மேலும், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x