Published : 16 Dec 2019 10:08 AM
Last Updated : 16 Dec 2019 10:08 AM

குடியுரிமை வழங்கும் சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தம் செய்வோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி

தேவைப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து அசாமில் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களை அடையாளம் காண தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில்19 லட்சம் பேர் வெளிநாட்டினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்ககாலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அவகாசம் முடிந்த பிறகு அவர்கள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தடுப்பு மையத்தில் அடைக்கப்பட உள்ளனர்.

குடியுரிமை திருத்த மசோதாவினால் வெளிநாட்டினராக அடையாளம் காணப்பட்ட 19 லட்சம்பேரில் சுமார் 5 லட்சம் வங்கதேசஇந்துகளுக்கு இந்திய குடியுரிமைகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் 'இன்னர் லைன் பெர்மிட்' மூலம்பாதுகாக்கப்படும் பகுதிகளுக்கு குடியுரிமை திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவும் அவரது அமைச்சர்களும் கடந்த வெள்ளிக்கிழமை என்னை சந்தித்துப் பேசினர். குடியுரிமை திருத்த சட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த சட்டத்தால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று அவர்களிடம் விளக்கம் அளித்தேன். எனினும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கிறிஸ்துமஸுக்கு பிறகு மீண்டும் என்னை சந்திக்க அறிவுறுத்தினேன். தேவைப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x