

ஒரு காலத்தில் கடனாளியாக இருந்த கர்நாடக விவசாயி வெங்காய விலை உயர்வால் தற்போது கோடீஸ்வரனாகி உள்ளார்.
கர்நாடகாவின் சித்ராதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மல்லிகார்ஜுன (42). விவசாயத்தில் இழப்பை சந்தித்த அவர் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் பயிரிட்டார். அண்மையில் அவர் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார். ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.200-க்கு விற்கிறது. அதன்படி 240 டன் வெங்காயத்தின் மதிப்பு ரூ.4.80 கோடியாகும். மொத்த சந்தையில் அவர் விற்றிருந்தால்கூட ரூ.4 கோடி கிடைக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடனாளியாக இருந்தவர்
இதுகுறித்து விவசாயி மல்லிகார்ஜுன கூறியதாவது:
எனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வெங்காயத்தை பயிரிட்டேன். தற்போது வெங்காய விலை அதிகரித்திருப்பதால் எனக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. கூடுதலாக 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெங்காயத்தை பயிரிட முடிவு செய்துள்ளேன். புதிதாக 50 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளேன். ஒரு காலத்தில் கடனாளியாக இருந்தேன். இப்போது கோடீஸ்வரனாகிவிட்டேன். அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டேன். புதிதாக வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். கூடுதலாக நிலம் வாங்கவும் முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.