

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. 3 பஸ்களும், ஒரு தீயணைப்பு வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீஸார் பலர் காயமடைந்தனர்.
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது என்று போராட்டக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த 12-ம் தேதி அசாமின் குவாஹாட்டி நகரில் நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது 2 பேர் உயிரிழந்தனர். பலர்படுகாயம் அடைந்தனர். இதில் ஈஸ்வர் நாயக் என்பவர் நேற்று முன்தினம் இரவும் அப்துல் ஆலிம் என்பவர் நேற்று காலையும் உயிரிழந்தனர். 27 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குவாஹாட்டியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்பட்டது. அந்த மாநிலத்தின் இதர நகரங்களிலும் ஊரடங்குபடிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அசாம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.
குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததை கண்டித்து மேற்குவங்கத்தில் கடந்தசில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், ஹவுரா, தெற்கு 24 பர்கானா, வடக்கு 24 பர்கானா மாவட்டங்களில் நேற்று சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. 6 மாவட்டங்களிலும் பதற்றம் நீடிப்பதால் இணைய வசதி துண்டிக்கப்பட்டிருக்கிறது.
2 போலீஸ் வாகனம் எரிப்பு
காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி ஜாமியா நகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 பஸ்கள், 2 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. இதில் ஒரு தீயணைப்பு வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. சிலர் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பல போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "வன்முறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி போலீஸாரின் அறிவுரைப்படி பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப்பட்டன. ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் வெளியாட்கள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்க பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.