

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தெற்கு டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு நடத்திய போராட்டம் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து வன்முறையாக மாறியது.
டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு ஆர்ப்பாட்டாக்காரர்கள் தீவைத்தனர். தெற்கு டெல்லியின் நியூபிரெண்ட்ஸ் காலனியில் தீயணைப்பு வண்டிக்கும் தீ வைக்கப்பட்டது. அந்தப் பகுதி முழுதும் போலீஸார் சுற்றி வளைத்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தரப்பில் கூறப்படும்போது, அமைதிப்பேரணி நடத்திய போது போலீஸார் தடியடி நடத்தியதாகக் குற்றம்சாட்டினர். தெற்கு டெல்லி பகுதிக்கு 4 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு தீயணைப்பு வண்டி முழுதும் எரிந்து போனது இரண்டு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜமாலியா மிலியா இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைக்கும் தீவைப்புச் சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை உள்ளூர் சக்திகள் போராட்டத்துக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் போராட்டம் அமைதியானது அஹிம்சா வழியில்தான் என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
எந்த ஒரு வன்முறையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. போராட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.