Published : 15 Dec 2019 06:06 PM
Last Updated : 15 Dec 2019 06:06 PM

குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி அசோம் கனபரிஷத் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்போவதாக பாஜக கூட்டணிக் கட்சியான அசோம் கனபரிஷத் கட்சியின் தலைவர் குமார் தீபக் தாஸ் தெரிவித்துள்ளார்.

அசாம் மக்களின் அடையாளம் மற்றும் இருப்புக்கு இந்தச் சட்டத்திருத்தம் அச்சுறுத்தல் என்பதை மக்கள் உணர்ந்திருப்பதால் ஏஜிபி அவர்களின் உணர்வுகளை மதித்து இந்த முடிவை எடுத்துள்ளது என்கிறார் குமார் தீபக் தாஸ்.

“அசாம் மாநிலத்தின் பூர்வீக மக்கள் இந்தச் சட்டத்திருத்தம் தங்கள் அடையாளம்,மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். ஆகவே நாங்கள் சட்ட ரீதியாக இந்தச் சட்டத்திருத்தத்தை சந்திக்க முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

இன்று மாலையே ஏஜிபி குழு ஒன்று குமார் தீபக் தாஸ் தலைமையில் தலைநகர் டெல்லிக்குப் புறப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அசாம் மக்கள் எதிர்ப்புக்குக் காரணம் என்ன?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள், பார்சிக்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றம் மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேறியதையடுத்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்து கலவரமாக மாறியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

இந்த மசோதாவில் அந்நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்பது ஒரு புறம் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில் அசாமில் போராட்டம் வெடித்ததற்குக் காரணம் இந்த புதிய திருத்தச் சட்டம் 1985ம் ஆண்டின் அசாம் ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என்பதே.

மேலும் அசாமில் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்துள்ள பெங்காலி இந்துக்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர், முஸ்லிம்களும் உள்ளனர், ஆனால் இந்தச் சட்டம் அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக அமைந்துள்ளது. பெங்காலி இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாரக் பள்ளத்தாக்கு மக்கள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.

ஆனால் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. பாஜக அரசு இந்தச் சட்டம் அசாம் இந்து அடையாளத்தை முஸ்லிம் அகதிகள் வருகையிலிருந்து பாதுகாக்கவே என்று கூறி சமாதானம் செய்ய முயன்றாலும் பெங்காலி இந்துக்களினால் அசாமையே பூர்விகமாகக் கொண்டுள்ள மக்கள் தொகையின் பண்பாடு, மொழி அழிந்துவிடும் என்ற இவர்களின் பயத்துக்கு பாஜகவின் சமாதானம் பதிலாக அமையவில்லை. பெங்காலி இந்துக்களின் ஆதிக்கம் தங்கள் அடையாளத்திற்கு தீங்கு விளைவித்து விடும் என்பதுதான் அசாம் மக்களின் போராட்டத்துக்குக் காரணமாக உள்ளது.

அசாம் மக்களின் முக்கியப் பயம் என்னவெனில் வங்காள மொழி பேசும் இந்தக் குடியேறிகளான பெங்காலி இந்துக்களுக்கு குடியுரிமை அளித்து விட்டால் அசாம் பூர்விக மக்கள் தொகையை விட அவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்பதே. மேலும் பாரக் வாலே பகுதியில் பெங்காலி இந்துக்கள் அதிகம் உள்ளதால் அசாமிய மொழி அங்கு இன்னமும் அரசு மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. திரிபுராவில் கிழக்கு வங்காளத்திலிருந்து வந்து குடியேறிய பெங்காலி இந்துக்கள் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் மூலம் திரிபுரா பழங்குடியினர் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்.

இதனால்தான் திரிபுராவிலும் மாநிலப் பழங்குடியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரத்யோத் மணிக்யா தேப்பர்மா என்ற அமைப்பு மூலம் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு வந்து குடியேறிய பெங்காலி இந்துக்களால் தங்கள் பண்பாடு, மொழி, அடையாளம் ஆகியவை அழிந்து விடும் என்பதே அசாம் மக்கள் போராட்டத்துக்கான காரணம்.

அதனால்தான் அசாம் கனபரிஷத் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x