

உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இத்தனை ஆண்டுகளாகப் பாகிஸ்தான் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் உள்ளிட்டவற்றில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த சூழலில் ஜார்கண்ட் மாநிலத்தில் 4-வது கட்டமாக நடக்க உள்ள தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இன்று ஈடுபட்டார். தும்கா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
பாகி்ஸ்தான் இத்தனை ஆண்டு காலம் செய்ததை முதல்முறையாகக் காங்கிரஸ் கட்சி செய்கிறது. அரசியலமைப்பு 370 பிரிவை ரத்து செய்தோம், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்பபு ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் இந்தியத் தூதரகங்கள் முன் போராட்டம் நடத்தியது. இப்போது அதே போராட்டத்தை காங்கிரஸ் கட்சி சொந்த நாட்டு அரசின் தூதரகம் முன் நடத்துகிறது. சொந்தநாட்டு தூதரகம் முன் எந்த நாட்டு குடிமக்களாவது போராட்டம் நடத்துவார்களா. இதைக் காட்டிலும் வெட்கப்படக்கூடிய விஷயம் ஏதேனும் இருக்கிறதா. தூதரகத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு மத்தியஅரசுக்கு வந்துள்ளது. இந்தியாவின் தோற்றத்தை காங்கிரஸ் அவமானப்படுத்துகிறது
காங்கிரஸ் கட்சியினர் தங்களின் குடும்ப நலன் பற்றித்தான் கவலை கொள்கிறார்கள், அவர்களிடம் இருந்து நாட்டுக்கு ஏதேனும் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. நாட்டுக்காக, சமூகத்துக்காக பணியாற்றுவோரே அவர்கள் ஏற்க தயாரில்லை.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தலைச் சந்தித்த இஸ்லாமியர்கள் அல்லாத மத சிறுபான்மையினர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியாவுக்குள் வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கவே, மரியாதை வழங்கவே குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் வந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்காகவே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எந்தவழியிலும் தெரியாததால் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து குழப்பத்தில் ஈடுபடுகின்றனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தையும் காங்கிரஸ் கட்சியினர் தூண்டிவிடுகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் எந்தவிதமான செயல்திட்டமும் காங்கிரஸ் கட்சியிடமும், முப்தி மோர்ச்சா கட்சிடமும் இல்லை, அவர்கள் நாட்டின் மீது குற்றம்சாட்டுகிறார்கள் அவர்களுக்குத் தேவை பாஜகவை எதிர்க்க வேண்டும், மோடி மீது குற்றம்சாட்ட வேண்டும்.
இவ்வாறு பிரமதர் மோடி தெரிவித்தார்