

கிரேட்டர் நொய்டாவில் பிரியாணி விற்பனை செய்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த விற்பனையாளரை ஒருசிலர் சேர்ந்து அடித்து உதைத்த வீடியோ வைரலானதையடுத்து 3 பேர் மீது கவுதம புத்தர் நகர் போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீஸார் தகவல்களின் படி, இந்த வீடியோ டிசம்பர் 13ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மதியம் ராபுபுரா பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
வீடியோவில் பிரியாணி வியாபாரியைத் தாக்கிய போது தாக்கிய நபர் அவர் மீது சாதிவெறி வசைமாரி பொழிந்தது பதிவாகியிருந்தது. மேலும் இந்தப் பகுதியில் பிரியாணி விற்றது தவறு என்று அவரை மன்னிப்பு கேட்கவும் வைத்ததும் வீடியோவில் பதிவானது.
“இந்த வீடியோ எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது நாங்கள் அந்த பிரியாணி வியாபரியை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்தோம். அவரது வாக்குமூலத்தையடுத்து 3 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி சட்டம் உட்பட 3 சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தோம்” என்று ஊரக எஸ்பி. ரன்விஜய் சிங் தெரிவித்தார்.
“தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர் இருதரப்பினருமே ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்கள். இருதரப்பினருமே அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பிரியாணிக்கான தொகையை கேட்ட போது வாய்த்தகராறு ஏற்பட்டு பிறகு அடிதடியில் முடிந்துள்ளது. வியாபாரியை அடித்து உதைத்தனர் அதோடு சாதிவசை பொழிந்தனர். பாதிக்கப்பட்டவர் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர், தாக்கியவர்கள் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு ஊரக எஸ்.பி. ரன்விஜய் சிங் தெரிவித்தார்.