

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டம், அங்கு நிலவும் சட்டம்ஒழுங்கு நிலவரம் ஆகியவற்றைப் பிரதமர் மோடியைச் சந்தித்து, மேற்கு வங்க பாஜக குழுவினர் விளக்கினர்
இந்த குழுவில் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் விஸ்வாபிரியா ராய் சவுத்ரி தலைமையிலான குழுவினர், பிரதமர் மோடியை பஸ்சிம் பர்த்மான் மாவட்டத்தில் உள்ள அன்டல் விமானநிலையத்தில் சந்தித்துப் பேசினார்.
ஜார்க்ண்ட் மாநிலத்தில் தும்கா நகருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்குப் புறப்படும் முன் மோடியின் விமானம், பர்த்மான் மாவட்டத்தில் உள்ள அன்டல் விமானநிலையத்தில் தரையிறங்கியது. அப்போது பிரதமர் மோடியை பாஜக குழுவினர் சந்தித்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் அடையாளம், கலாச்சாரம், பாரம்பரியத்தை இழந்துவிடுவோம், எனக் கூறி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல மேற்கு வங்க மாநிலத்திலும் மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த 3 நாட்களாக தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். நாடியா, ஹவுரா, பிர்பும், நார்த்24 பர்கானா, ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 3 ரயில் நிலையங்கள் தீவைக்கப்பட்டுள்ளன, 25 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் காலையில் இருந்து பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மேற்கு வங்க அரசே, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால், போராட்டக்காரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயல்படக்கூடாது, அமைதியான வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும், மக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்புடம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில் பிரதமர் மோடியைச் சந்தித்த மாநில பாஜக நிர்வாகிகள் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் விஸ்வாபிரியா ராய் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், " பிரதமர் மோடியுடன் பேசுவதற்குக் குறைந்த அளவே நேரம் கிடைத்தது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அவரிடம் பேசினோம். மாநில அரசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சூழல் மோசமாகிவிட்டதைப் பிரதமரிடம் தெரிவித்தோம்" எனத் தெரிவித்தார்