Last Updated : 15 Dec, 2019 11:44 AM

 

Published : 15 Dec 2019 11:44 AM
Last Updated : 15 Dec 2019 11:44 AM

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் மனுதாரர்கள் திட்டம்

அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இறுதியாகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முஸ்லில் மனுதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்யக்கோரி ஏராளமானோர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மனுதாரர்களுக்கு இறுதி வாய்ப்பாகச் சீராய்வு மனுத் தாக்கலே கருதப்படுகிறது. அந்த வாய்ப்பை நோக்கி முஸ்லிம் மனுதாரர்கள் நகர்ந்துள்ளனர்.நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலானா மக்புசூர் ரஹ்மான், மிஷ்பாஹுத்தீன், முகமது உமர் மற்றும் ஹாஜி நஹூப் ஆகியோர் தனித்தனியாக 5 சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். 6-வது நபராக முகமது அயூப் என்பவரும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்தார்.

மூல மனுதாரர் சித்திக் சார்பில் மவுலானா சயத் ஆசாத் ரஷித் என்பவரும் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதை எதிர்த்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக், சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், நந்தினி சுந்தர், ஜான் தயால் உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து தனியாக ஒரு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.
பல்வேறு தரப்பினரும் மொத்தமாக 17 மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்தது இறுதி வாய்ப்பாக இருக்கும் சீராய்வு மனுவை முஸ்லிம் மனுதாரர்கள் தாக்கல் செய்ய உள்ளார்கள். அரிதினும் அரிதாக மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்தபின்தான் மனுவின் உயிர்ப்புத்தன்மை தெரியவரும்.

ஜாமியத் உலமா இ ஹிந்த்(ஜெயுஹெச்) இதுதொடர்பாக விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. மேலும்,அனைத்து இந்திய பாபர் மசூதி செயல் குழு(ஏஐபிஎம்ஏசி) ஆகியவையும் சீராய்வு மனுத் தாக்கல் குறித்து ஆலோசிக்க இருக்கிறது.

இதுகுறித்து அனைத்து இந்திய பாபர் மசூதி செயல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜபார்யாப் ஜிலானி நிருபர்களிடம் கூறுகையில், " அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முயன்று வருகிறேன். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானிடம் ஆலோசனை நடத்தி, அதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்துக் கேட்போம். அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் சீராய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்க இருக்கிறது.

எங்களின் துரதிர்ஷ்டம் எங்களின் மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. ஆனால், சபரிமலை வழக்கில் அதிகமான நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது போன்று எங்கள் மனுக்களையும் பரிசீலிக்கலாம் என்று நம்புகிறோம். நாங்கள் சீராய்வு மனுக்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்துவிடுவோம் என்று கூறமுடியாது. குறைந்தபட்சம் ஒருமாதம் இதுதொடர்பாக சட்டஆலோசனைநடத்தி அதன்பின் முடிவு செய்வோம் " எனத் தெரிவித்தார்

ஜாமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் சட்டப் பிரிவு செயலாளர் குலாம் அகமது ஆஸ்மி கூறுகையில், " சீராய்வு மனு என்பது அரிதினும் அரிதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாகும். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இயற்கை நீதி ஒப்புக்கொள்ளப்படாவிட்டால், அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு பொதுமக்கள் நம்பிக்கையைப் பெறாதபட்சத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யலாம். நாங்களும் அந்த எண்ணத்தில்தான் அணுகுகிறோம்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x