

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமானது.
இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்தச் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்தில் இன்று 6 மணிநேரம் கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
மேற்கு வங்க அரசே, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பதால், மாநிலத்தின் ஏராளமான இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இருந்த பதற்ற நிலை இன்று சற்று தணிந்ததையடுத்து, திப்ருகார்க், குவஹாட்டி போன்ற நகரங்களில் ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டது. இருப்பினும் அசாமில் உள்ள சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேக்கியாஜுலி எனும் இடத்தில் டேங்கர் லாரிக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.
அசாமில் இன்று பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பினாலும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. இணையதளம் மூலம் வதந்திகள் வேகமாகப் பரவுவதால், வரும் 16-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் இணையதளச் சேவையை ரத்து செய்ய தலைமைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிலும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
குவஹாட்டி நகரில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்படும் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அசாம் மாநிலத்தில் உள் அனுமதி கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் இன்று தொடர்ந்தது.
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இன்று பல்வேறு இடங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வன்முறை நடந்தது. உள் அனுமதி கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்காக மேகாலய அரசு சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டவும் முடிவு செய்துள்ளது
நாகாலாந்து மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்றும் அடைக்கப்பட்டன. 6 மணிநேரம் கடையடைப்பு, பந்த் கடைப்பிடிக்கப்பட்டதால், சாலையில் எந்த வாகனமும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
குடியுரிமைச் சட்டத்துக்கு மேற்கு வங்க அரசே எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால், போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்கரயில் ரயில் நிலையத்துக்கு ஒரு கும்பல் தீ வைத்து, பாதுகாவலரையும் தாக்கிவிட்டுச் சென்றது. ஏராளமான மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
ஹவுரா, சீல்டா இடையிலான ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் இருந்து டெல்லி , மும்பை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தனியார், அரசு வாகனங்களைப் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். முர்ஷிதபாத்தில் உள்ள சோதனைச் சாவடிக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். போராட்டக்காரர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படக்கூடாது, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது. அவ்வாறு நடந்தால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே பிஹார் மாநிலத்தில் வரும் 21-ம் தேதி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.