

நாடாளுமன்றத்தைப் பற்றியும், ஜனநாயக அமைப்புகளைப் பற்றியும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கவலைப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்
காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று போராட்டம், பேரணி நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
நாட்டின் குழப்பமான தலைவர், அரசால் குழப்பமான சூழல் நிலவுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், அனைவருக்குமான வளர்ச்சி எங்கு இருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் ஆன்மாவைச் சேதப்படுத்திவிடும் இதற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் போராடும்.
அநீதிகளால் பாதிக்கப்படுவது மிகப்பெரிய குற்றம். நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் நேரமிது. நாட்டைப் பாதுகாக்கும் நேரம் வந்துள்ளதால், அதற்காகக் கடினமாகப் போராட வேண்டும்.
நாடாளுமன்றத்தைப் பற்றியும், ஜனநாயக அமைப்புகளைப் பற்றியும் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கவலைப்படவில்லை. அவர்களின் திட்டம் உண்மையான பிரச்சினைகளை மக்களிடம் மறைத்து, மக்களிடையே மோதல் உருவாக்குவதுதான். அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு நாளும் மீறுகிறார்கள், அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தை பெருமை படுத்தும் தினத்தையும் நடத்துகிறார்கள்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார