Last Updated : 14 Dec, 2019 04:55 PM

 

Published : 14 Dec 2019 04:55 PM
Last Updated : 14 Dec 2019 04:55 PM

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: கூடும் குளிரை சமாளிக்க உல்லன் உடைகளுக்கு மாறிய தமிழக எம்.பி.க்கள் 

டெல்லியில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் நடுக்கத்தை சமாளிக்க தமிழக எம்.பிக்கள் உல்லன் உடைகளை அணிந்து வந்தனர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று டிசம்பர் 13 இல் முடிவடைந்தது. இதன் தொடக்க நாட்களில் இருந்ததை விட டெல்லியில் குளிர் மிகவும் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற நடுங்கும் குளிரை வட மாநில எம்.பிக்கள் உல்லன் இழைகளாலான நவீன குளிர் உடைகளை உடுத்தி சமாளிப்பது வழக்கம். குறிப்பாக மத்திய அமைச்சர்கள் இந்த குளிர் உடைகளுடன் மிடுக்காகி விடுவது உண்டு.

இதேபோல், பெண் எம்.பிக்களும் பட்டு மற்றும் சில்க் சேலைகளுடன் ஸ்வெட்டர், உல்லன் சால்வைகளுக்கு மாறி விடுவர். இந்த ஆண், பெண்களில் பல எம்.பிக்கள் திரைப்பட நட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் கழுத்தில் வித,விதமான மப்ளரையும் அணிவது உண்டு.

இதுபோன்ற பலவர்ண உடை மாற்றங்களினால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு வரும் எம்.பிக்களை அடையாளம் காண்பதும் சற்று சிரமமாகி விடும்.

வட மாநில எம்.பிக்களின் மிடுக்கை கண்டு வியந்த தமிழக எம்.பிக்களும் அதுபோன்ற உல்லன் உடைகளுக்கு இந்தமுறை மாறி இருந்தனர். வட மாநிலத்தவரை போல் தமிழகத்தின் பெரும்பாலான எம்.பிக்களின் உடைகளில் பெரிய மாற்றம் தெரிந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வேஸ்கோட்களை அணிந்து கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

மோடி ஜாக்கெட்

இந்த வேஸ்கோட்கள் சமீப ஆண்டுகளாக ’நேரு ஜாக்கெட்’ என்றழைக்கப்பட்டு வருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி அதிகம் அணிவதால் ‘மோடி ஜாக்கெட்’ எனப் பெயர் மாற்றம் கொண்டுள்ளது.

கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்களை டெல்லி குளிர் மாற்றி மக்களவையில் இருந்தது. மோடி ஜாக்கெட் அணிபவர் பட்டியலில் கம்யூனிஸ்டு கட்சிகளின் சி.பி.எம்.மின் சு.வெங்கடேசன் மற்றும் சி.பி.ஐ.யின் கே.செல்வராஜ் இடம்பெற்றனர். சி.பி.ஐ.யின் கே.சுப்பராயன் குளிருக்கு அஞ்சி உல்லன் உள்ளாடைகளுடன் முழுக்கை ஸ்வெட்டரும் அணிந்திருந்தார்.

கோவை எம்.பி.யான சி.பி.எம்மின் பி.ஆர்.நடராசன் பார்ப்பதற்கு வழக்கம்போல் இருப்பினும் அவரது சட்டைக்கு உள்ளே ஸ்வெட்டர் இருந்தது. இதுபோன்ற குளிரை ஏற்கெனவே எம்.பி.யாக இருந்து நடராசன் அனுபவித்தவர்.

இதனால், அவர் தம் சகஎம்.பிக்களுக்கும் உல்லன் ஆடைகள் அணியுமாறு நடராசன் அறிவுறுத்தி வலியுறுத்தி உள்ளார். திமுகவின் ஞானதிரவியம், தனுஷ்குமார், வேலுச்சாமி, கதிர் ஆனந்த் உள்ளிட்ட சிலர் இடம் பெற்று இருந்தனர்.

இதில், ஞானதிரவியம் தன் வேட்டி அணியும் பழக்கத்தை விடவில்லை. கலாநிதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி உள்ளிட்ட சிலர் கோட் ஷீட் அணிந்திருந்தனர். கவுதம், டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மற்றும் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முழுக்கை ஸ்வெட்டர் உடுத்தி இருந்தனர்.

வெள்ளை, வேட்டி சட்டையில் இருந்த காங்கிரஸ் எம்.பியான திருநாவுக்கரசர் வெளியில் வரும்போது மட்டும் உல்லன் சால்வை அணிந்து குளிரை சமாளித்தார். இவரைபோல், சில எம்பிக்கள் உல்லன் உடைகளை அணியாமலே குளிரை சமாளித்து விட்டனர்.

பாரம்பரிய சேலைகள்

பெண் எம்.பிக்களில் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பாரம்பரிய சேலையுடன் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்தனர். இதுபோல், குளிருக்கான உடையை ஏற்காமல் அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை வேட்டி, சட்டையை விட முடியாமல் இருந்த தமிழக எம்.பிக்களையும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பார்க்க முடிந்தது..

இவர்களில் ஒருசிலர் மட்டும், குளிருக்காக உல்லன் உள்ளாடைகளை அணிந்து சமாளிப்பது வெளியில் தெரிவதில்லை. இதேபோன்ற நிலையே, மாநிலங்களவையில் தமிழக எம்பிக்களிடமும் இருந்தது.

அதிமுகவின் எம்பிக்கள் பலரும் முண்டாசுக்கை ஸ்வெட்டர் மற்றும் மோடி ஜாக்கெட் அணிந்தார்கள். மாநிலங்களவையின் அதிமுக எம்.பியான விஜிலா சத்யானந்த் குளிருக்கு ஏற்றவகையில் நீண்டகோட் அணிந்திருந்தார்.

முண்டாசுக்கை ஸ்வெட்டரை அணிந்தாலும் மதிமுக தலைவர் வைகோ வேட்டியை விடவில்லை. எஸ்.ஆர்.பாலசுப்பரமணியம், புதிய எம்,பியான ஜான் முகம்மது உள்ளிட்ட சிலர் அரைக்கை சட்டை மற்றும் வேட்டியுடன் காணப்பட்டனர்.

மாநிலங்களவையின் திமுக எம்பிக்களும் முண்டாசுக்கை கை ஸ்வெட்டர் அணிந்து குளிரை சமாளித்தனர். மூத்த எம்.பியான திருச்சி சிவா கழுத்தில் மப்ளரும் அழகாக அணிந்து வந்தார். வழக்கறிஞரான பி.வில்சன் மட்டும் தனது வழக்கமான பாணியில் தொடர்ந்த கோட் ஷீட் அவரை குளிரில் இருந்தது காத்தது.

உல்லன் உடை முறையாக அணியாத எம்.பிக்களில் பலரும் குளிருக்கு பயந்து வெளியில் உலவுவதை தவிர்க்கின்றனர். வீடு, நாடாளுமன்றம் மற்றும் அதன் உள்ளே இருக்கும் கட்சி அலுவலகம் என எல்லைகளை சற்று சுருக்கிக் கொள்கிறார்கள்.

டி.ரவிக்குமாருக்கு அவசர சிகிச்சை

குளிரை பொருட்படுத்தாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான டி.ரவிகுமாருக்கு சளி அதிகமாகி நாடாளுமன்றத்திலேயே ஒருமுறை அவசர சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அதன் பிறகு ரவிகுமார் முண்டசு ஜாக்கெட்டுக்கு மாற வேண்டியதாயிற்று

இதற்கு தமிழகத்தில் பழக்கம் இல்லாமல் அந்த எம்.பிக்கள், திடீர் என தன் உடைமாற்றம் செய்ய முன்வருவதில்லை. இத்துடன் அவர்களின் உதவியளர்களாக வரும் சிலர் குளிரை பற்றி தம் எம்.பிக்களுக்கு முறையாக எச்சரிக்காமல் விடுவதும் காரணமாகி விடுகிறது.

சமீபத்தில் ஜெர்மனிக்கு சென்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல்,திருமாவளவன் அங்கு கோடி, சீட் அணிந்து கம்பீரமாக உலவி இருந்தார். ஆனால், அதே குளிர் சீதோஷ்ணத்தில் இருந்த டெல்லிக்கு வந்த போது அவர் வேஸ்கோட்டை மட்டும் அணிந்தாரே தவிர கோட் விடுபட்டிருந்தது.

எனினும், கடந்த ஆட்சிகளில் இருந்ததை விட இந்தமுறை தமிழக எம்.பிக்களின் குளிர்கால உடைகளில் பெருத்த மாற்றம் காணப்பட்டது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x