Last Updated : 14 Dec, 2019 04:01 PM

 

Published : 14 Dec 2019 04:01 PM
Last Updated : 14 Dec 2019 04:01 PM

பாஜகவின் தொடர்ச்சியான அநீதிகளுக்காக எதிராக போராடாதவர்கள் வரலாற்றில் கோழைகளாகக் கருதப்படுவார்கள்: பிரியங்கா காந்தி தாக்கு

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ச்சியாக அநீதிகளை இழைத்து வருகிறது, இன்றைய அநீதிகளுக்கு எதிராகப் போராடாதவர்கள் வரலாற்றில் கோழைகளாகக் கருதப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தைக் காப்போம் என்ற பெயரில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் என்று பொதுக்கூட்டம், பேரணி நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

நாட்டில் தற்போதுள்ள சூழலுக்கு எதிராக ஒவ்வொருவரும் இணைந்து துணிச்சலுடன் போராட வேண்டும். பாஜக அரசின் தோல்வி அடைந்த, பிரிவினைவாத, சீர்குலைக்கும் கொள்கைகளைச் சுட்டிக்காட்டவே இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

நீங்கள் இந்தியாவை விரும்புவாராக இருந்தால், உங்களின் குரலை தயவுசெய்து உயர்த்துங்கள். நீங்கள் இன்று தொடர்ந்து மவுனமாக இருந்தால், நம்முடைய புரட்சிகரமான அரசியலமைப்புச் சட்டம் அழிக்கப்படும். நாட்டை பிரிக்கும் முயற்சி தொடங்கப்படும். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் எந்த கறைபடிந்த தலைவரும் இந்த பிரிவினையைச் செய்தாலும் அதற்கு நாமும் பொறுப்பாகிவிடுவோம்.

ஒவ்வொரு பேருந்து நிறுத்தம், ஒவ்வொரு நாளேடு, தொலைக்காட்சி சேனல் எதில் பார்த்தாலும் மோடியால்தான் அனைத்தும் நடந்தது என்று இருக்கிறது.

பாஜக ஆட்சியில் உண்மை என்னவென்றால், வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் உங்களால்தான், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்ததும் உங்களால்தான், 4 கோடி வேலைவாய்ப்புகளும் உங்களால்தான் அழிக்க முடியும். பாஜக இருந்தால், 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலையும் சாத்தியம்தான்.

நான் உன்னாவ் நகரில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்க அவர் இல்லத்துக்குச் சென்றேன். அப்போது அந்த பெண்ணின் தந்தை, அவரின் உள்ளங்கைக்குள் முகத்தைப் புதைத்து அழுது கண்ணீரிவடித்தார்.

இதைப் பார்த்தபோது, என் தந்தை தற்கொலைப்படை தாக்குதலில் உடல் குலைந்து ரத்தமும், சதையுமாக மண்ணில் முகத்தைப் புதைத்து விழுந்து கிடந்தது என் நினைவுக்கு வந்தது. என் தந்தையின் ரத்தம் இந்த மண்ணை வளர்ப்பதுபோல் உன்னாவ் பெண்ணின் ரத்தமும் வளர்க்கும்.

உன்னாவில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைவிட்டு நான் புறப்பட்டபோது, அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியின் 9 வயது மகளிடம் நீங்கள் வாழ்க்கையில் என்னவாகப் போகிறாய் என்று கேட்டேன். முதலில் அந்த சிறுமி பதில் சொல்ல மறுத்து பின்னர், வழக்கறிஞராகப் போகிறேன் என்றார். நீதி கிடைப்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கிறது. அதற்காக நாம் கண்டிப்பாகப் போராட வேண்டும்.

தற்போது, தொடர்ச்சியாக அநீதிகள் நடக்கின்றன. விவசாயிகள் பெரும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். ஏழைகள் பெரும் இடர்பாடுகளால் சுமைகளைச் சந்திக்கிறார்கள், ஆனால், பணக்காரர்களின் கஜானாக்கள் நிரம்புகின்றன. இன்றைய அநீதிகளுக்கு எதிராகப் போராடாதவர்கள் எதிர்காலத்தில் கோழைகளாகக் கருதப்படுவார்கள்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x