பெண்களின் பாதுகாப்புக்காக ஆந்திராவின் 'திஷா' சட்டத்தைப் போல் இயற்றுவோம்: கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதி

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி : கோப்புப்படம்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி : கோப்புப்படம்
Updated on
1 min read

ஆந்திராவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிதாக இயற்றப்பட்டுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரள மாநிலத்திலும் கொண்டுவருவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வோம் என்று கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதியளித்தார்.

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆந்திர அரசு கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது.இதன்படி பெண்களையும், குழந்தைகளையும் பலாத்காரம் செய்பவர்களுக்கு 21 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச திஷா மசோதா- கிரிமினல் சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீதான புலன் விசாரணையை 7 நாட்களில் முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் விசாரணையை முடிக்க வேண்டும்.

பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டத்துக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை என்ற போதிலும், மக்கள், பெண்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மசோதா குறித்து கேரள சுகாதார மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ள திஷா சட்டத்தைப் போல் இயற்றுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா மசோதாவை நாங்கள் ஆய்வு செய்வோம். அதில் என்ன விதமான அம்சங்கள் இருக்கின்றன, அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்துப் பரிசீலிப்போம்.

கேரளாவில் சட்டங்கள் கடினமாக இருந்தாலும், எவ்வாறு அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது. ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தைப் போல் கேரளாவிலும் சட்டம் இயற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in