

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்துள்ள தேசிய போதைமருந்து கடத்தல் தடுப்பு பிரிவினர், ரூ.1,300 கோடி மதிப்பு போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி மற்றும் சுற்றியுள்ள தேசிய தலைநகர் மண்டல பகுதியில் அதிகஅளவில் போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உ.பி.யிலும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
அமெரிக்கா, நைஜிரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் 100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், ஆஸ்திரேலியாவில் 200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும் கைபற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வேறு சில நாடுகளில் இருந்தும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி ஆகும்.
இது தொடர்பாக 5 இந்தியர்கள், நைஜீரியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.