24 மணி நேரத்தில் 471.7 மி.மீட்டர் மழை: 10 ஆண்டு சாதனையை விஞ்சியது சிரபுஞ்சி

24 மணி நேரத்தில் 471.7 மி.மீட்டர் மழை: 10 ஆண்டு சாதனையை விஞ்சியது சிரபுஞ்சி
Updated on
1 min read

நேற்று ஒரே நாளில் 471.7 மி.மீட்டர் மழைப்பொழிவைப் பெற்று, ஒரு நாளில் அதிகபட்ச மழைப்பொழிவு என்ற கடந்த 10 ஆண்டு சாதனையை சிரபுஞ்சி நேற்று உடைத்தது.

மேகாலயா மாநிலத்தில் சிரபுஞ்சிதான் உலகிலேயே அதிக மழைப்பொழிவைக் கொண்ட பகுதியாகும். (தற்போது சிரபுஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள மாசின்ரோம் என்ற பகுதியே உலகிலேயே அதிக சராசரி மழைப்பொழிவைக் கொண்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது). சிரபுஞ்சியின் பெயர் மாற்றப்பட்டு, சோரா என்ற அதன் புராதனப் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு, நேற்று காலை 8.30 மணி வரை யிலான 24 மணி நேரத்தில் அதிக பட்ச மழைப்பொழிவு என்ற புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சோரா வானியல் ஆய்வு மைய அதிகாரி விஜய் குமார் சிங் கூறும்போது, “புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 471.7 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2005 ஆகஸ்ட் 21-ம் தேதி 407.7 மி.மீ. பெய்ததே, ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழையளவாகும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 1964-ம் ஆண்டு சோராவில் ஒரே நாளில் 853 மி.மீ. மழை பதிவானதே, 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழையளவாகும்.

காசி மலைப்பகுதியின் தென் சரிவில் அமைந்துள்ள சோரா (சிரபுஞ்சி)வில் ஆண்டுக்கு சராசரியாக 12,000 மி.மீ. மழையளவு பதிவாகிறது. 1974-ம் ஆண்டு, 24,555 மி.மீ. பெய்ததே இங்கு ஓராண்டின் அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

இம்மாதத்தில் இதுவரை சோராவில் மட்டும் 1,644.5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

இருப்பினும் மேகாலயா முழுக்க கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை 1,489.1 மி.மீ. மழையளவே பதிவாகி யுள்ளது. வழக்கமாக இக்கால கட்டத்தில் சராசரியாக 2,056.2 மி.மீ. மழை பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in