ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக்க வேண்டும் –மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என மக்களவையில் இன்று கோரிக்கை எழுந்தது. இதை அதன் தர்மபுரி தொகுதி திமுக எம்.பியான எஸ்.செந்தில்குமார் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து இன்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் தர்மபுரி எம்‌.பியான, எஸ். செந்தில்‌குமார்‌ பேசியதாவது: எனது தொகுதியான தர்மபுரியில்‌ இயற்கை எழில்‌ கொஞ்சும்‌ ஒகேனக்கல்‌ நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இது மிக மிக அழகான சுற்றுலாத்தலம்‌ மட்டுமல்லாது, வனப்பு மிகுந்த ரம்மியமான பகுதியும்‌ ஆகும்‌. ஆனாலும்‌, இது முறைசாரா வகையில்‌ இன்னும்‌ வரைப்படுத்தபடாத சுற்றுலா மையமாகவே உள்ளது.

இந்த நிலையை, மாற்ற வேண்டும்‌. இதை சர்வதேச தரத்தில்‌ அமைந்த சுற்றுலா தலமாக, மத்திய அரசு மாற்ற வேண்டும்‌. அதுமட்டுமல்லாது, அங்கு பல்வேறு வேலைவாய்ப்புகளும்‌ உருவாக்க வேண்டும்‌.

தற்போதைக்கு, அங்கு பரிசல்‌ ஓட்டுனர்கள்‌, மீன்‌ உணவு சமைப்பவர்கள், எண்ணெய்‌ மசாஜ்‌ செய்வோர்‌ என மூன்று வகையான தொழில்கள்தான் உள்ளன. ஆனாலும்‌, கர்நாடக அணைகளிலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, காவிரி ஆற்றில்‌ அதிகஅளவு வெள்ளப்பெருக்கு ஏற்படும்‌ மயங்களில்‌, இந்ததொழிலில்‌ ஈடுபடுவோரும்‌, பாதிக்கப்படுகின்றனர்‌.

ஏறத்தாழ 4 முதல்‌ 6 மாதங்களுக்கு, இவர்களின்‌ தொழில்கள்‌ பறிபோய்‌, வாழ்வாதாரம்‌ பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடுகள்‌ செய்து தரும்படி, நீண்டகாலமாக அவர்கள் கேட்டு வருகின்றனர்‌.

சுற்றுலாவாசிகள்‌ இல்லாத காலங்களில்‌, குறிப்பிட்ட சில பகுதிகளில்‌ மட்டுமாவது, சில நிபந்தனைகளுடன்‌ கூடிய விதிமுறைகளுடன்‌, பரிசல்‌ ஓட்டுவதற்காவது அனுமதி தரும்படி கோரி வருகின்றனர்‌. எனவே, இதற்கு தீர்வு காணும்‌ விதமாக மாவட்ட நிர்வாகத்துடன்‌ இணைந்து ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்ய வேண்டும்.

இதில், சுற்றுலாவாசிகள் இல்லாத காலங்களிலும்‌, அங்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்‌. ஏற்கனவே அங்குள்ள வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதோடு, ஒகேனக்கல்‌ சுற்றுலா மையத்தை சர்வதேச தரத்துக்கு சீரமைத்து தருவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்‌.

இவ்வாறு அவர் பேசினார்‌.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in