போக்ஸோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் டி.ரவிகுமார் மனு 

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் டி.ரவிகுமார் மனு 
Updated on
1 min read

போக்ஸோ(POCSO) வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கைக்கு வலியுறுத்தி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் மனு அளிக்கப்பட்டது. இதை இன்று திமுகவின் விழுப்புரம் எம்.பியான டி.ரவிக்குமார் அமைச்சரிடம் அளித்தார்.

நாடாளுமன்றத்தின் அமைச்சர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான ரவிக்குமார் தன் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்குகளின் நிலவரம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்த, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள போக்ஸோ வழக்குகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இணை கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் வெளியான விவரங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் 31 வரை விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகளில் 7 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 163 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன;

278 வழக்குகள் விசாரணையில் உள்ளன; 26 வழக்குகள் இன்னும் கோப்பில் எடுத்துக்கொள்ளப்படவில்லை; 10 வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
போக்ஸோ வழக்குகளை விசாரிக்க எனத் தனியே நீதிமன்றம் எதுவும் விழுப்புரம் மாவட்டத்தில் இல்லை.

அந்த வழக்குகள் மகிளா நீதிமன்றத்திலேயே நடத்தப்படுகின்றன. இது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.

வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்பட்டதும் கூட திருப்திகரமாக இல்லை.
எனவே, இந்த விஷயத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தலையிட்டு தமிழ்நாடு மாநில அரசுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in