Last Updated : 13 Dec, 2019 06:18 PM

 

Published : 13 Dec 2019 06:18 PM
Last Updated : 13 Dec 2019 06:18 PM

இந்தியாவில் முதல்முறை: பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை: மசோதாவை நிறைவேற்றியது ஆந்திர அரசு

பெண்களைப் பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிராக முழுமையான ஆதாரங்கள் இருந்தால் 21 நாட்களில் தூக்கு தண்டனை வழங்கும் மசோதாவை நாட்டிலேயே முதல்முறையாக,ஆந்திர அரசு இன்று ஒருமனதாக நிறைவேற்றியது.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் செய்திருந்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஆந்திர அரசு எடுத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிர்பயா சட்டத்தின் கீழ் பலாத்கார குற்ற வழக்குகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதைத் திருத்தி 21 நாட்களில் விசாரணையை முடிக்க ஆந்திர அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது

ஹைதராபாத் பெண் மருத்துவரின் பெயரை மறைக்கும் வகையில், இந்த மசோதாவுக்கு ஆந்திரப்பிரதேச திஷா மசோதா- கிரிமினல் சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் விரைவாக விசாரிக்கப்படும்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீதான புலன் விசாரணையை 7 நாட்களில் முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் விசாரணையை முடிக்க வேண்டும்.

இந்த புதிய சட்டத்தில் ஐபிசி பிரிவில் 354இ, 354எப், 354ஜி ஆகிய 3 பிரிவுகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தாக்குதல்கள் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல்முறையாக குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

மசோதாவை பாராட்டி ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த பெண்கள் முதல்வர் ஜெகனுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர். (படம்)

மேலும் இதில் 376 பிரிவு(பலாத்காரம்), 376டி(மருத்துவமனையில் எந்த பெண்ணுடனும் உடல்ரீதியாக உறவுவைத்தல்), 376டிஏ(16வயதுக்கு கீழான சிறுமிகளைக் கூட்டுப்பலாத்காரம் செய்தல்)ஆகியவற்றுக்கு மரண தண்டனை அளிக்கவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஐபிசி பிரிவுகள் 354எப், 354ஜி, 376, 376ஏ, 376ஏபி, 376டி, 376டிஏ, 376டிபி ஆகியவை தூக்குத் தண்டனையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மசோதாவை அறிமுகம் செய்த மாநில உள்துறை அமைச்சர் எம். சுச்சாரித்தா இது ஓய்எஸ்ஆர் அரசின் புரட்சிகரமான மசோதா என்று புகழாரம் சூட்டினார்.

இந்த மசோதாவின்படி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படவும் மசோதா கொண்டுவரப்பட்டது. 13 மாவட்டங்களில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, பலாத்காரம், அமில வீச்சு, சமூக ஊடக துன்புறுத்தல், பாலியல் தொந்தரவு ஆகிய வழக்குகளும், போக்ஸோ வழக்குகளும் விசாரிக்கப்படும்.

இந்த வழக்குகளைக் கையாள்வதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞர்களும், டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் சிறப்பு போலீஸாரும் ஒதுக்கப்படுவார்கள்.

மேலும் குழந்தைகள் தொடர்பாகக் குற்றப்பதிவேடு மாவட்டம் தோறும் பராமரிக்கப்பட்டு அது அவ்வப்போது பொதுப்படையாக மக்களிடம் இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x