குடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

சர்பானந்த சோனாவால் - கோப்புப் படம்
சர்பானந்த சோனாவால் - கோப்புப் படம்
Updated on
1 min read

அசாமில் காங்கிரஸூம், பிரிவினைவாத அமைப்புகளும் திட்டமிட்டு வன்முறையை தூண்டி விடுகின்றன என அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து சட்டமாகியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல்வேறு மாணவர் அமைப்புகளும் இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில் அசாமில் நடந்து வரும் போராட்டம் குறித்து அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் கூறியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டத்தால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அசாம் மக்களின் அரசியல், மொழி, கலாச்சாரம் மற்றும் நிலவுரிமையை பாதுகாக்க அரசியல் சட்டம் வழங்கியுள்ள பிரிவு 6-ன் கீழ் வழங்கியுள்ள பாதுகாப்பு வலிமையுடன் தொடர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால் அசாமில் காங்கிரஸூம், பிரிவினைவாத அமைப்புகளும் திட்டமிட்டு வன்முறையை தூண்டி விடுகின்றன.’’ எனக் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in