

2019-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீதமாகக் குறையும் என்று கடன்தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் கணித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் குறைவாக வளரும் வேலைவாய்ப்புகள், மக்களின் நுகர்வுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.
ஆனால், 2020-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கும். 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் அதிகரிக்கும். ஆனால், வளர்ச்சியின் வேகம் குறைந்த அளவில்தான் இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியமும் (ஐஎம்எப்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாகச் சரியும் என்றும், உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 6 சதவீதமாகவும் சரியும் என்றும் கணித்திருந்தது. ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மூடிஸ் முதலீட்டாளர்கள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை (ஜிடிபி) 2019-ம் ஆண்டில் 5.6 சதவீதமாகக் குறைத்துள்ளோம். ஆனால், அடுத்து வரும் ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்தாலும் வளர்ச்சி குறைந்த வேகத்தில்தான் இருக்கும். கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம் இருந்த நிலையில், இந்த ஆண்டு 5.6 சதவீதமாகக் குறையும்.
2018-ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்துதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் உண்மையான ஜிடிபி மதிப்பான 8 சதவீதத்தில் இருந்து தற்போது 2-வது கலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜூலை செப்டம்பரில் 4.5 சதவீதமாகச் சரிந்துள்ளது.
மக்களின் நுகர்வு குறைந்து, தேவை குறைந்துள்ளது. குறைந்த வேகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவை பொருளாதாரச் சரிவுக்குக் காரணங்களாகும். ஆனால், 2020, 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் என்று நம்புகிறோம். 2020-ம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் அதிகரிக்கும்.
மத்திய அரசு எடுத்து வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளான கார்ப்பரேட் வரிக் குறைப்பு, வங்கிகளுக்கு மறு முதலீட்டு நடவடிக்கை, கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடுதல் அதிகரிப்பு, ஆட்டோமொபைல் துறைக்கு ஆதரவு, பல்வேறு துறைகளுக்குக் கடனுதவி, தேவை குறைவாக இருக்கும் இடத்தில் ஊக்கமளித்தல் போன்றவற்றால் வரும் ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
ஆனால், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி அளித்த வட்டிக் குறைப்பு நடவடிக்கை போதுமான அளவு நுகர்வோருக்குச் சென்று சேரவில்லை. இதனால் வாகன விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் கடன் வழங்குவதை எளிதாக்குதல், அரசின் உதவிகளை அதிகப்படுத்தும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி வேகமாகும்''.
இவ்வாறு மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.