

ஜெய்ப்பூர் நகருக்குள் புகுந்த சிறுத்தையை 21 மணிநேர போராட்டத்துக்குபின் வனத்துறையினர் பிடித்தனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த சிறுத்தை ஒன்று திடீரென புகுந்தது. லால் கோதி என்ற பகுதிக்குள் நேற்று மாலை புகுந்த சிறுத்தை அங்கிருந்த விளையாட்டு அரங்கத்துக்குள் சென்று பதுங்கியது.
இதையடுத்து உடனடியாக வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் வந்தனர். அந்த பகுதி மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். வீடுகளின் கதவுகள், ஜன்னல் கதவுகள் மூடி வைக்கப்பட்டன. இரவு முழுவதும் அந்த பகுதியை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்.
விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்த சிறுத்தையை வனத்துறையினர் சுற்றி வளைத்தபோது வனத்துறை ஊழியர் ஒருவரை சிறுத்தை கடுமையாக தாக்கி விட்டு தப்பியோடியது. காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் சென்று பதுங்கியது. அந்த பகுதியில் 2 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இன்று காலை வரை சிறுத்தையை பிடிக்க முடியாத நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் மக்கள் நடமாட்டமும் தடை செய்யப்பட்டது. கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பல ஏறத்தாழ 21 மணிநேர போராட்டத்துக்கு பின் சிறுத்தையை பிடித்தனர்.