Published : 13 Dec 2019 01:58 PM
Last Updated : 13 Dec 2019 01:58 PM

பிரச்சினையை திசைதிருப்புகிறது பாஜக; நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி திட்டவட்டம்

தனது 'ரேப் இன் இந்தியா' கருத்துக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிராவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பலாத்காரங்கள்) நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.,வால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அப்பெண் வாகன விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி நரேந்திர் மோடி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

பெண்களைப் படிக்கவைப்போம்; பாதுகாப்போம் என்று மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. பாஜக எம்.எல்.ஏ.,க்களிடமிருந்து தான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை" என்று பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மக்களவையில் பேசிய ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, "எனது கருத்துக்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. நாட்டில் தற்போது தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக இதனை கையில் எடுத்திருக்கு.

நான் மத்தியப் பிரதேசத்தில் பேசும்போது, பிரதமர் மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறார். ஆனால் நாம் செய்தித்தாளை திறந்தால் இந்தியாவில் நடக்கும் பலாத்காரங்களைப் பற்றிதான் வாசிக்க வேண்டியுள்ளது என்றே கூறினேன். இதனைத் திரித்து நம் கண் முன்னே இருக்கும் முக்கிய பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார்கள்" என்றார்.

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,"இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி. நாட்டின் ஏற்றுமதி திறனை அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தார். ஆனால் அதை மோசமான ஒரு குற்றச் செயலுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது என்னை மட்டுமல்ல தேசத்தையே அவமதிக்கும் செயல். இத்தகைய நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது" என்றார்.

மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்..

இதற்கிடையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "வடகிழக்கு மாநிலங்களை பற்றி எரியச் செய்து கொண்டிருப்பதற்காக, இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்ததற்காக, முன்பொரு நாள் பேசியபோது தலைநகர் டெல்லியை பலாத்காரங்களின் தலைநகரம் எனக் கூறியதற்காக" பிரதமர் மோடிதான் மன்னிப்பு கோர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x