

மக்களவையில் நேற்று சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான மசோதா முன்வைக்கப்பட்டது. இதில் பேசிய விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழுக்காக மத்திய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் விவாதத்தில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார் பேசியதாவது:
''இங்கே பேசிய பல உறுப்பினர்கள் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான தொன்மை தொடர்பான தகவல்களைக் கூறினார்கள்.
தமிழ் என்பது ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழியாக இருந்தது. பின்னாளில்தான் தென்னிந்தியாவிலே மட்டும் பேசப்படுகிற மொழியாக மாற்றப்பட்டது. இதை மொழியியல் வல்லுநர்களுடைய கூற்றுகளை ஆதாரமாகக் கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட சித்திரக் குறியீடுகள் இதுவரை எந்த மொழி என்று அடையாளம் காணப்படாமல் இருந்தன. அஸ்கோ பர்போலா என்ற மொழியியல் அறிஞர் சிந்துவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகளுடைய முன்னோடி என்று கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதற்காகத் அஸ்கோ பார்பலோவிற்கு தமிழக அரசின் விருது கிடைத்திருந்தது. சமஸ்கிருதத்துக்குப் பல கொடைகளைத் தமிழ் அளித்திருக்கிறது.
எழினி என்ற தமிழ்ச் சொல்தான் சமஸ்கிருதத்தில் யவனிகா என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தமிழறிஞர் சீனி.வேங்கடசாமி பல கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு நிரூபித்து இருக்கின்றார். அது மட்டுமல்ல நமது தேசிய பறவையாக இருக்கின்ற மயில் என்பதைக் குறிக்க நாம் மயூரா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
அது தமிழிலிருந்து கடன்பெற்ற சொல்தான். நீர், அனல், ஆடு, கான், களம், தாமரை, தண்டு, பல்லி, புன்னை, மயில், மல்லிகை, மை, மகள், மாலை, மீன் என்னும் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்தில் நீர, அனல, எட, கானன, கல, தாமரஸ, தண்ட, பல்லீ, புன்னாக, மயூர, மல்லிகா, மஷி, மஹிளா, மாலா, மீனா எனப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நேரத்திலே ஏற்கெனவே இங்கே சுட்டிக்காட்டியபடி எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
சமஸ்கிருத பாடசாலைகள் 8000
சமஸ்கிருதத்திற்கென்று ஏற்கெனவே 16 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன; 112 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் உயர் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது; 10,000 கல்லூரிகளில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது. அரசு ஆதரவோடு 8000 சமஸ்கிருத பாடசாலைகள் இந்த நாட்டிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழுக்காக மத்திய பல்கலைக்கழகம்
எனவே, சமஸ்கிருதம் நசிவு அடைந்துவிடவில்லை. ஆனால், அதற்காக மூன்று பல்கலைக்கழகங்களை உடனடியாக மத்திய அரசு உருவாக்குகின்ற இந்த நேரத்திலே தமிழுக்கென்று ஒரு மத்திய பல்கலைக் கழகத்தை உருவாக்க வேண்டும்''.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.
மக்களவை மாற்றுத் தலைவர் பாராட்டு
ரவிக்குமார் பேசியதைக் கேட்ட மக்களவை மாற்றுத் தலைவர் பத்ருஹரி மஹதாப், ஒரிய மொழியில் ஏராளமான தமிழ்ச்சொற்கள் கலந்திருப்பதை சுட்டிக்காட்டி ரவிக்குமாரின் கருத்துகளை ஆமோதித்தார்.