Last Updated : 13 Dec, 2019 11:30 AM

 

Published : 13 Dec 2019 11:30 AM
Last Updated : 13 Dec 2019 11:30 AM

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்: மக்களவையில் பாஜக எம்.பி. பேச்சு

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என மக்களவையில் மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்.பி. கணேஷ் சிங் பேசியுள்ளார்.

மக்களவையில் நேற்று (வியாழக்கிழமை) மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் சட்ட மசோதா 2019 மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பேசிய, பாஜக எம்.பி. கணேஷ் சிங், "அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆராய்ச்சியில் சமஸ்கிருதம் பேசுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனக் கண்டறிந்துள்ளது.

அதேபோல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், கணினி புரோகிராமிங்கை சமஸ்கிருததில் எழுதினால் அது பிழையற்றதாக இருக்கும் எனக் கண்டறிந்துள்ளது.

சமஸ்கிருத மொழியைப் பேசி வந்தால் அது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை எப்போதுமே சீராக வைத்திருக்கும்.

உலகம் முழுவதும் பேசப்படும் சில இஸ்லாமிய மொழிகள் உட்பட 97% மொழிகளின் அடிப்படை சமஸ்கிருதமே.

டெல்லியில் உள்ள ராஷ்ட்ரீய சமஸ்கிருத சங்கஸ்தான், ஸ்ரீ லால் பகதூர் சாச்ஸ்திரி ராஷ்ட்ரீய சஸ்ன்ஸ்கிருதி வித்யாபீத் மற்றும் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரிய சன்ஸ்கிரித் வித்யாபீத் ஆகிய மூன்று நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தரம் உயர்த்தப்பட்டு சமஸ்கிருத பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "சமஸ்கிருத மொழியை மட்டுமல்ல தமிழ், இந்தி, கன்னடம், வங்காளம் என அனைத்து மொழிகளையும் மேம்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம்.
சமஸ்கிருத இலக்கியப் படைப்புகள் அறிவுப் பொக்கிஷம். அவற்றில் அறிவியல் முதல் பொருளாதாரம் வரை எல்லாம் நிறைவாக இருக்கிறது. அடுத்த தலைமுறையினரும் சமஸ்கிருத நூல்களை வாசிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது" எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x