

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குடியிருப்புப் பகுதிகளில் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் குறித்து எல்லை பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்.எஸ்.புரா, அர்னியா பகுதிகளில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இரண்டு முறை அத்துமீறலில் ஈடுபட்டனர்.
குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்தும் குண்டுகளை வீசினர். தானியங்கி ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தினர்.
அதிகாலை 4.30 மணியளவில் தாக்குதல் அதிகரித்தது. அவர்கள் வீசிய பீரங்கிக் குண்டுகள் சர்வதேச எல்லையில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் சிதறி விழுந்தது.
இதில் அப்பாவி பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் கடும் சேதமடைந்தன. சில கால்நடைகளும் உயிரிழந்தன.
எல்லை பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்திய ராணுவத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை" என்றார்.
துணைமுதல்வர் கண்டனம்
தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் "குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து பொதுமக்கள் உயிருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் நாட்டை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
55-வது அத்துமீறல்
கடந்த 2003-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானிடையே எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதில்லை என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 245 முறையும் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 55 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.