

அசாம், திரிபுரா மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் இந்த போராட்டத்தை திட்டமிட்டு தூண்டிவிடுவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும். ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குவஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் மக்களவையில் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிரஞ்சன் சவுத்திரி கூறுகையில் ‘‘மக்கள் விருப்பத்துக்கு எதிராக குடியுரிமைத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன. மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.’’ எனக் கூறினார்.
அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறுக்கிட்டு பேசுகையில் ‘‘வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டத்தை திட்டமிட்டு தூண்டிவிடுகிறது. மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன’’ எனக் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.