Published : 12 Dec 2019 12:57 PM
Last Updated : 12 Dec 2019 12:57 PM

ஹைதராபாத் என்கவுன்ட்டர்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் விசாரணைக் குழு; தெலங்கானா எஸ்ஐடிக்கு தடை: உச்ச நீதிமன்ற உத்தரவு 3 பேர் யார்?

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரைப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து இன்று உத்தரவிட்டது.

இந்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழு 6 மாதங்களுக்களுக்குள் தங்களின் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணைக் குழுவில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புராக், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரேகா, சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவை நீதிபதிகள் நியமித்துள்ளனர்

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர் அப்போது 4 பேரும் போலீஸாரின் தாக்க முயன்றபோது, போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது.

என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.தெலங்கானா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கிருஷ்ணகுமார் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறுகையில், " தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாகச் சார்பற்ற தனி விசாரணை தேவை என்று நாங்கள் கருதுகிறோம்" எனத் தெரிவித்தார்

அதற்கு தெலங்கானா போலீஸார் தரப்பில் ஆஜராகிய முகுல் ரோஹத்கி வாதிடுகையில், " இதற்கு முன் உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியை விசாரணையைக் கண்காணிக்க மட்டுமே அனுமதித்துள்ளது. ஆனால், விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. விசாரணை நடத்தவும் முடியாது" எனத் தெரிவித்தார்

அதற்கு தலைமை நீதிபதி போப்டே, " தெலங்கானா போலீஸார் மீது நீதிமன்றத்தில் நீங்கள் கிரிமினல் வழக்கு தொடரப் போகிறீர்கள் என்றால் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நீங்களே அவர்களை நிரபராதி என்று கூறினால், மக்கள் கண்டிப்பாக உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

ஊகத்தின் அடிப்படையில் உண்மை வேண்டாம். விசாரணை நடக்கட்டும், ஏன் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?தெலங்கானா போலீஸார் குற்றவாளி என்று நாங்கள் கூறவில்லை. விசாரணைக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம் அதில் பங்குபெறுங்கள். இந்த என்கவுன்ட்டரில் பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று நாங்கள் கருதுகிறோம்.

அதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கிறோம். இந்த விசாரணைக் குழு 6 மாதங்களில் தங்கள் விசாரணயை முடித்து அறிக்கை அளிக்கும்.

நாங்கள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு உத்தரவிட கூடாது. தெலங்கானா அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழு, மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை விசாரிக்கக் கூடாது.

இந்த விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புராக், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரேகா, சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் இடம் பெறுவார்கள் " என்று உத்தரவிட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x