Last Updated : 12 Dec, 2019 12:26 PM

 

Published : 12 Dec 2019 12:26 PM
Last Updated : 12 Dec 2019 12:26 PM

திருவக்கரை தேசிய கல்மரப் பூங்காவைக் காக்க மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் ரவிக்குமார் மனு

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவக்கரையில் உள்ள தேசிய கல்மரப் பூங்கா அழிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இதைக் காக்க மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் இன்று திமுக எம்.பியான டி.ரவிக்குமார் மனு அளித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி.ரவிகுமார் தனது மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: புதுச்சேரியிலிருந்து திண்டிவனத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரை என்னுமிடத்தில் தேசிய கல்மரப் பூங்கா அமைந்துள்ளது.

1940 ஆம் ஆண்டில் அமைந்த இந்த பூங்கா, ’ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா’ நிறுவனத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரங்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சான்னெரெட் என்பவரால் 1781 ஆம் ஆண்டு இந்த கல்மரங்கள் திருவக்கரையில் கண்டறியப்பட்டன. சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கிராமங்களில் இந்த கல்மரங்கள் பரவிக்கிடக்கின்றன.

இந்தக் கல்மரப் பூங்கா அமைந்திருக்கும் திருவக்கரை சுற்றி உள்ள கிராமங்களில் கல் குவாரிகள் மற்றும் கல்லுடைக்கும் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு உரிமம் வழங்கியுள்ளது.

அந்த உரிமங்கள் பெற்றவர்கள் திருவக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் பலவற்றில் பழமைவாய்ந்த கல் மரங்களை உடைத்து சாலை போடப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக திருவக்கரையை அடுத்த கடகம்பட்டு எனும் கிராமத்தில் இப்படிப் பல நூறு மரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

இது தற்போது திருவக்கரையில் அமைந்துள்ள தேசிய கல்மரப் பூங்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மாண்புமிகு மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு திருவக்கரை தேசிய கல்மரப் பூங்காவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x