Last Updated : 30 May, 2014 09:32 AM

 

Published : 30 May 2014 09:32 AM
Last Updated : 30 May 2014 09:32 AM

இலங்கை கடற்படைக்குப் பயந்து காசிமேட்டுக்கு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள்: மீனவர் பிரச்சினைக்கு மோடி அரசு தீர்வு காண வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 64 பேர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது பதவி யேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப் புலானி ஒன்றியத்தைச் சேர்ந்த 64 மீனவர்கள், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி அவர்கள், இங்கு பணிக்கு வந்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் நீங்கியதையடுத்து, வியாழக்கிழமை அவர்கள் கடலுக் குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தாங்கள் இங்கு வந்ததற்கான காரணம் குறித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் `தி இந்து’விடம் கூறியதாவது:

நாங்கள் பரம்பரை பரம் பரையாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் இருந்து படகுகளில் மீன்பிடிக்கச் செல்வோம். குறிப்பாக, கச்சத்தீவு பகுதிகளில் மீன்வளம் அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு சென்று மீன் பிடிப்போம்.

முன்பெல்லாம், இந்திய எல்லையைத் தாண்டி மீன் பிடித்தாலும், இலங்கை கடற் படையினர் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால், நாளடைவில் அது மாறத் தொடங்கியது.

கச்சத் தீவு பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நாங்கள் மீன் பிடித்தாலும், இலங்கை கடற்படை எங்களை கைது செய்கிறது. அத்துடன், படகுகளை பறிமுதல் செய்து, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகிறது. நாங்கள் கஷ்டப்பட்டு பிடிக்கும் மீன்களையும் பறிமுதல் செய் கின்றனர்.

அதோடு இலங்கை கடற்படை யினர் எங்களை கொடூரமாக தாக்குகின்றனர். இதில், ஏராளமான மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர். எவ்வித காரணமும் இன்றி எங்களை இலங்கை சிறையில் மாதக் கணக்கில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர். இதனால், எங்கள் குடும்பம் வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது. இதனால், நாங்கள் ஒவ்வொரு முறை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போதும், உயிரை கையில் பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மீன் பிடிக்கச் செல்லும் போது, டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை கொண்டு செல்ல படகு உரிமையாளர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்கின்றனர். ஆனால், மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் போது இலங்கை கடற்படையினர் அவற்றை பறிமுதல் செய்வதால் படகு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் எங் களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக, நாங்கள் சென்னை காசிமேடு துறைமுகத்திற்கு வந்து, இங்கு பணியில் சேர்ந் துள்ளோம்.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நாங்கள் 64 பேர் ஐந்தாண்டு களாக இங்கு பணிபுரிந்து வருகிறோம்.

காசிமேடு மீனவர்கள் பெரும்பாலும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி கடற்பகுதியில் தான் மீன்பிடிப்பார்கள். அல்லது புதுச்சேரி கடற்பகுதியில் சென்று மீன்பிடிப்பார்கள். இதனால், நாங்கள் அச்சமின்றி கடலுக்குச் செல்ல முடிகிறது.

கடந்த ஐந்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், மீனவர்கள் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலை யில், மத்தியில் புதிதாக பொறுப் பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மீனவர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு ஏற்பட்டால், மீண்டும் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x