

கர்நாடகாவில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் அடிக்கடி தீப்பிடிப்பதற்குக் காரணம் அதில் கலக்கும் கழிவு நீரில் அதிக அளவில் மீத்தேன் வாயு இருப்பதாக சூழலியல் மற்றும் நீர் ஆய்வியல் பிரிட்டன் மையம் தன் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.
பிரிட்டனின் சூழலியல் மற்றும் நீர் ஆய்வியல் மையமும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் குறித்த அசோகா அறக்கட்டளையும் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தின. இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு விவரங்கள், ‘பெங்களூரு ஏரிகளை மீட்டெடுக்க தீர்வுகள்’ என்ற பட்டறையில் அளிக்கப்பட்டன.
கழிவு நீர் குறைந்த அளவில் கலந்து விடும் ஏரிகளை ஒப்பிடுகையில் பெல்லந்தூர் ஏரியில் கலக்கும் கழிவு நீரின் மீத்தேன் உள்ளடக்கம் 1000 மடங்கு அதிகமிருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆய்வாளர்கள் கார்வால்ஹோ மற்றும் பிரியங்கா ஜம்வால் கூறும்போது, “அதிக அளவிலான மீத்தேன் வாயு இருப்பது நகரில் உள்ள வீடுகளுக்கு தீப்பிடிக்கும் வாய்ப்பை அதிகரிப்பதோடு புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் மீத்தேன், கரியமில வாயுவை விட 20 மடங்கு சக்தி பெற்றதாகும். ஆகவே ஏரிகளை அதன் மீத்தேன் வாய்த்தன்மையிலிருந்து அகற்றுவது நகரின் கார்பன் ஃபுட் பிரிண்ட்டையும் குறைக்கும்” என்றனர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் அதிகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.