கடற்படை வீரர்கள் மீதான வழக்கு: சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிடுகிறது இத்தாலி

கடற்படை வீரர்கள் மீதான வழக்கு: சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிடுகிறது இத்தாலி
Updated on
1 min read

இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் அந்நாட்டு அரசு முறையிட உள்ள நிலையில், இந்தியா சார்பில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றனர்.

இதுதொடர்பாக அந்தக் கப்பலில் இருந்த 2 இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை எதிர்த்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள கடல் சட்டத்துக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் (ஐடிஎல்ஓஎஸ்) இத்தாலி அரசு இன்று முறையிட திட்டமிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், அலைன் பெல்லட் மற்றும் ஆர்.புண்டி ஆகிய 2 பிரபல வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியா சார்பில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெல்லட், சர்வதேச சட்டத்தில் நிபுணர் மட்டுமல்லாது ஐ.நா.சர்வதேச சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். இதுபோல பல்வேறு சர்வதேச சட்ட வழக்குகளில் வழக்கறிஞராக சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் புண்டி.

இந்த 2 வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எல்.நரசிம்மா, வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு ஜெர்மனி விரைந்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்திய நீர்நிலை பகுதியில் இந்த சம்பவம் (மீனவர்கள் சுட்டுக் கொலை) நடந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் சர்வதேச தீர்ப்பாயம் தலையிட முடியாது. இத்தாலி அரசின் மனுவை எதிர்த்து இந்தியா வாதாடும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in