

நாட்டின் 90 சதவிகித ரயில்களில் பயோ கழிவறை வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மக்களவையில் தகவல் அளித்தார். இது குறித்து திமுக எம்.பி.யான கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.
இது குறித்து மக்களவையின் கேள்வி நேரத்தில் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கூறும்போது, ‘இந்தியாவிலேயே மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலநிலையைப் பெற்றிருப்பது ரயில்வே துறைதான். ஆனால் ரயில்வே துறை தாம் காண்ட்ராக்டர்களிடம் துப்புரவுப் பணிகளைக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறது.
இருப்புப் பாதைகளில் மலத்தை அள்ளுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் கூட கொடுக்கப்படவில்லை. இதற்கு ரயில்வே துறைதான் பொறுப்பேற்க வேண்டும். கான்ட்ராக்டர்களை நோக்கி திசை திருப்பிடக் கூடாது.’ எனத் தெரிவித்தார்
இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: மனித மலத்தை மனிதர்களே அள்ளும் முறை நாடு முழுவதும் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டதை என் அருமைச் சகோதரி கனிமொழி அறிந்திருப்பார்.
எங்களது ஆட்சிக் காலத்தில் ரயில்களில் 90 சதவிகித கழிவறைகளை பயோ டாய்லெட்களாக மாற்றிவிட்டதால் இருப்புப் பாதையில் கழிவுகள் விழுவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் நூறு ஆண்டுகளாக ரயில் பாதைகளில் கழிவுகள் விழுந்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? 5 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இருப்புப் பாதைகளில் நுகர்ந்த வாடையை இப்போது நுகர முடியாது.
தற்போது 90 சதவிகித கழிவறைகள், பயோ டாய்லெட்டுகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், இதை விட சிறந்த திட்டம் ஏதாவது இருந்தால் கனிமொழி அவர்கள் அரசுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.